காகிதத் தொழிற்சாலை:
1956ல் சென்னை மாநிலத்தில் ஒரு காகிதத் தொழிற்சாலை கூட இல்லை. மாநிலத்தின் தேவைக்கு வெளியிலிருந்தே காகிதத்தை வாங்கினர். காகிதம் தயாரிக்கத் தேவையான கச்சாப் பொருட்களை
மூங்கில் மரம், இரசாயனப் பொருட்கள், மின்சாரம், தண்ணீர் எல்லாமே வேண்டிய அளவு கிடைத்தது. எனவே ஒரு சில தொழிற்சாலைகளாவது சென்னை மாநிலத்தில் அமைக்கப்பட வேண்டும் என அரசு அதிக ஆர்வம் செலுத்தியது. மாநில அரசு இதைப் பற்றி மத்திய அரசு வல்லுநர்களுடன் விவாதித்தது.
ஜெர்மனி நாட்டிலிருந்து ஒரு வல்லுநர் குழுவும், இத்தாலி நாட்டிலிருந்து ஒரு வல்லுநர் குழுவும், சென்னை மாநிலத்தில் காகிதத் தொழிற்சாலை அமைக்கும் வாய்ப்புகள் பற்றியும், கிடைக்கும் வசதிகள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டன.
சென்னை மாநிலத்தில் கிடைக்கும் மூங்கில், யூகாலிப்டஸ், மிலாறு மற்றும் மென் மரங்கள் ஆகியவற்றைக் கொண்டு நீலகிரி-மேட்டூர் பகுதிகளில் “காகிதம்” தயாரிக்கும் இரு தொழிற்சாலைகள் அமைக்கத் திட்டம் போடப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு நாள்தோறும் 50 முதல் 60 டன்கள் காகிதம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பவானி சாகரில் ஒன்றும், மேட்டூரில் ஒன்றும் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டுறவு சங்கம்: (co-operative society)
தொழில் அல்லது தொழிற்சாலை துவங்க நல்ல மூலதனம் தேவை. அதே போல் தொழில் பற்றி தெரிந்தவர்கள்,திறமையானவர்கள் தேவை என்பது எல்லோருக்கும் தெரியும்.
தொழில் மற்றும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களையும், பொது மக்களையும் சேர்த்து பங்குதாராகச் சேர்க்க வேண்டும். இதனால் கிராமப்புற மக்கள் வாழ்வு மேம்படும் என எண்ணியது சென்னை மாகாண அரசு தொழிலாளர்களும், பொது மக்களும் சேர்ந்து தொழில் அல்லது தொழிற்சாலை அமைத்தால் கூட்டுறவு ஆகும்.
அதன் அடிப்படையில் தொழிற்சாலையை இயக்கத் தேவையான திறமையுள்ள மற்றும் திறமையற்ற தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து கூட்டுறவுத் தொழில் மற்றும் தொழிற்சாலைச் சங்கங்களை அமைத்தனர். அவர்கள் மிகவும் ஏழைகளாக இருப்பதால் தொழிற்சாலையை நடத்தத் தேவையான மூலதனத்தைப் பெற முடியாமல் சிரமப்பட்டனர்.தங்கள் பங்காக மிகச் சிறிய மூலதனத்தையே அவர்களால் செலுத்த முடிந்தது.
இதை அறிந்த சென்னை மாகாண அரசு, தொழிலாளர்களுக்கு உதவ முன் வந்தது. கூட்டுறவுச் சங்கங்களை அமைக்கத் தொழிலாளர்களுக்கு உதவி செய்தது. தொழிற்சாலை அமைக்கத் தேவையான மூலதனத்தின் ஒரு பகுதியை அரசு அளிக்க முன் வந்தது. அவர்களது பங்கு மூலதனத்தைத் தடையின்றிச் செலுத்தவும், அரசு, தொழிலாளர்களுக்கு கடன் வசதி செய்து தந்தது. தொழிலாளர்கள் பங்கு மூலதனம் செலுத்தியது போக, தேவையான மீதி மூலதனத்தை, அரசு செயல் மூலட்டனமாக அளிக்க முன் வந்தது.
இந்த மூலதனத்திற்கு, அனைத்து உறுப்பினர்களுக்கும் கூட்டுப் பொறுப்பு உண்டு. ஆண்டு முடிவில் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதி ‘ரிசர்வ் பண்ட்’ ஆக மாற்றப்பட்டது. சங்க உறுப்பினர்களுக்கு இலாபம் 6¼% அளிக்கப்பட்டது, இது அவர்கள் பெற்று வந்த ஊதிய அடிப்படையில் வழங்கப்பட்டது.
இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்த பழமையான பாரம்பரியம் மிக்க தொன்மையான தொழில் கைத்தறியே ஆகும்.
நூற்பாலை:
கைத்தறி நெசவாலைகள் எண்ணற்ற சோதனைகளைத் தாங்கி வந்தது. அச்சோதனைகளிலிருந்து மீள்வதற்கு நீண்டகாலத் திட்டங்கள் தேவை என்பதை காமராஜ் அரசு உணர்ந்தது. அத்திட்டங்களை நிறைவேற்றுவதற்குப் பல முறைகளையும் செயல்படுத்தியது.
பிரச்சனை:
- நெசவு செய்யப் போதுமான அளவு நூல் கிடைக்காதது; கிடைத்த நூலும் நியாயமான விலையில் இல்லாதது.
- மின் துணிகளின் போட்டி.
- ஏற்றுமதி அங்காடிகள் குறைந்து போனது.
- தொழில் நுட்ப உதவி மற்றும் ஆராய்ச்சி இல்லாத நிலை.
- சரியான நிர்வாக அமைப்பு இல்லாமை.
இது போன்ற சில பிரச்சனைகளை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
நிரந்தரத் தீர்வு:
நூல் பிரச்சனையைத் தீர்க்க அதிக அளவு நூற்பாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் மூலம் நூல் உற்பத்தி அதிகரித்து நெசவாளர்களுக்குத் தேவையான நூல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தது. ஆனால் நூலின் விலை அதிகமாக இருப்பதால் உற்பத்திச் செலவு அதிகரித்து மில் துணிகளோடு போட்டியிட முடியாத நிலையை உருவாக்கியது.
கைத்தறியில் இடைத்தரகர்களை ஒழிப்பதன் மூலம் நூலின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக அரசு கண்டறிந்து, மில்லின் உற்பத்தி விலைக்கே நெசவாளர்களுக்கு நூலை வழங்கவும் அரசு முயற்சித்தது.
மேலும் கைத்தறி நெசவைப் புதுப்பிக்க அரசு எடுத்த முயற்சிகளில் முக்கியமான ஒன்று, கூட்டுறவு நூல்பாலைகளுக்கு வரி நிதியத்திலிருந்து நிதி உதவி செய்ததாகும். நீண்டகால கைத்தறி நூல் பிரச்சனைக்கு இதன் மூலம் தீர்வு கிடைத்தது.
மாநில அரசுகள் கூட்டுறவு நூல்பாலைகளில் 51% பங்கு வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டிகோள் விடுத்தது.
இதற்குத் தேவையான நிதியை வரி நிதியத்திலிருந்துப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. சென்னை அரசு ரூ.10 இலட்சம் கடனாகப் பெற்றது.
நெசவாளர்களுக்குத் தரமான நூலை நியாயமான விலையில் வழங்குவதே கூட்டுறவின் நோக்கமாகும். ஒவ்வொரு கூட்டுறவு நூல்பாலையும் தான் உற்பத்தி செய்த நூலை கூட்டுறவு கைத்தறி நெசவாளர்களுக்கு மட்டுமே வழங்கியது.
நூலின் விலை மில் துணிகளின் விலைகளோடு போட்டியிடும் அளவிற்கு மிகவும் குறைவாகவே இருந்தது. நூலின் விலை குறையும் போது துணியின் விலையும் பெருமளவு குறைந்தது. கைத்தறித் துணியின் விலை குறையும் போது அதன் தேவையும் அதிகரிக்கும் என்று நம்பப்பட்டது. இதனால் வருமானமும் அதிகரித்தது.
நூலின் தேவை:
கைத்தறி நெசவாளர்களின் நூலின் தேவையே மிக அதிகமாக இருந்தது. ஒன்றிரண்டு நூல்பாலைகளின் நூலைக் கொண்டு சரிக்கட்ட இயலாது. இராமநாதபுரத்தில் ஏற்கனவே இருந்த நூல்பாலையோடு 1958லிருந்து திருநெல்வேலி பேட்டையில், தென் இந்திய கூட்டுறவு நூல்பாலை இயங்கி வந்தது. மேலும் 2 நூல்பாலைகள்(ஸ்ரீவில்லிபுத்தூர், நாசரேத்) தொடங்க பதிவு செய்யப்பட்டது.
நெசவாலை:
1954ல் கூட்டுறவு சங்க கைத்தறி நெசவாலைகள் அமைக்க அரசு முயற்சி செய்தது. அதன்படி
- மலபார் மாவட்டம் லோகமாதா நெசவாலை
- தொட்டாடா கெளசல்யா நெசவாலை
ஆகிய இரண்டும் முதன் முதலில் “தொழிற்சாலை நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தின்” கீழ் கொண்டு வரப்பட்டன. இத்தொழிற்சாலைகளில் பணியாற்றிய நெசவாளர்கள் சாயமடிப்பவர்கள், மேஸ்திரிகள், பாவு போடுபவர்கள், எழுத்தர்கள் ஆகியோர்களைக் கூட்டுறவு உறுப்பினர்களாகச் சென்னை அரசு சேர்த்தது. பிற நெசவாலைகளில் உள்ளவர்களும், இக்கூட்டுறவின் கீழ் சேர்க்கப்பட்டனர்.
இவ்விரு கூட்டுறவு நெசவாளர் ஆலைகளுக்கு அரசு ரூ.1,12,302/- வ்ட்டியில்லாக் கடனாக வழங்கியது. இதன் மூலம் தறிகள், கருவிகள் வழங்கப்பட்டன. இங்கு உற்பத்தி செய்த துணிகளை விற்பதற்கு, ‘சென்னை மாநிலக் கூட்டுறவு நெசவாளர் சங்க அங்காடி’ பொறுப்பாக்கப்பட்டது.
சரியாகச் செயல்படாத தனியார் ஆலைகளைக் கூட்டுறவின் கீழ் கொண்டு வந்து மூடப்பட்ட ஆலைகளுக்குப் பதில் கூட்டுறவு நெசவாலை தொடங்கி, மேலும் 6 கூட்டுறவு நெசவாலைகள் அமைக்க இலக்கு நிர்ணயித்த்தது. கூட்டுறவு நெசவாலைகள் மொத்தம் 12 தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 10க்கு இந்திய அரசு அனுமதி வழங்கியது. அதில் முதலில் 7 நெசவாலைகள் (மதுரை, கரூர், மணவாசி, அருப்புக்கோட்டை, கூறைநாடு, ஆரணி, வெள்ளாந்தை) அமைக்கப்பட்டன. பின் 2ம் கட்டமாக 2 நெசவாலைகள் (இராஜபாளையம், விஜய மங்கலம்) அமைக்கப்பட்டன.
கைத்தறி நெசவு:
மாநில அரசின் கைத்தறித் திட்டங்களுக்கு உதவுவதற்கு மத்திய அரசு வரி நிதியம் ஒன்றை ஏற்படுத்தியது. பல மாநிலங்கள் கைத்தறித் தொழிலை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.
இம்முயற்சியில் சென்னை மாநில அரசு நல்ல முன்னெற்றம் கண்டது. கைத்தறியை வளர்க்க, மில் துணிகள் உற்பத்திக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
சிலவகை பெட்சீட்டுகள்,படுக்கை விரிப்புகள்,லுங்கிகள்,உற்பத்தி கைத்தறிக்கு மட்டும் ஒதுக்கப்பட்டது. விலை வேறுபாட்டைக் குறைக்க மில்துணிகளுக்கு எக்சைஸ் வரி விதிக்கப்பட்டது.
நவீன கருவிகள்:
சென்னை மாநில கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தால் நியமிக்கப்பட்ட துணைக் குழுவின், உற்பத்தித் தரம் பற்றிய பரிந்துரைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. மில் துணிகளுக்கு நிகரான தரத்தை மக்கள் எதிர்பார்த்தனர். ஒரே தரமான துணி உற்பத்திக்குத் தேவையான ரூ.70இலட்சம் மதிப்புள்ள நவீன கருவி அரசால் தறிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த நவீன கருவி ஏற்கனவே பம்பாய், ஹைதராபாத்தில் பிரசித்தம் பெற்றிருந்தது.
1957ல் சென்னை மாநிலத்தில் ஈரோடு வட்டாரத்தில் இந்நவீனக் கருவி அன்றைய சென்னை அரசால் தரப்பட்டது. இத்தகைய புதிய தொழிற்நுட்பம்,சாயம் தீட்டல்,உற்பத்தி முறை மூலம் கைத்தறித் துறைக்கு நல்ல வளர்ச்சி அளித்துள்ளது.
கைத்தறித் துணி அங்காடி:
1954ல் “வரி நிதியம்” ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பெரிய பிரச்சனையாக இருந்தது கைத்தறித் துணியின் தேவையை அதிகப்படுத்துவது ஆகும். கைத்தறித் துணி விற்பனையை அதிகப்படுத்தவும், நெசவாளர்கள் இருப்பு வைக்கும் திறனை அதிகப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதனால் துணிகளை மிகக் குறைந்த விலைக்கு விற்பது தவிர்க்கப்பட்டது.
தனி ஒரு நெசவாளரால் தங்கள் பொருளை இலாபமான முறையில் விற்பது என்பது முடியாத செயல். ஆகவே, அரசு கைத்தறித் துணிகளை முறையாக அங்காடியில் விற்கவும், கூட்டுறவு முறையில் விற்கத் தேவையான நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்தது.
விற்பனை யுக்தி:
நெசவாளர் தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு
- கடன் வசதி
- மேல்நிலையில் உள்ள சங்கங்கள், விற்பனை நிலையங்கள் அமைத்தல்
- புதிய இடங்களில் அங்காடிகள் அமைத்தல்
- கைத்தறித் துணிகளின் விலையில் தள்ளுபடி அளித்து அதன் மூலம் விலையைக் குறைத்து, தேவையை அதிகரித்தல்
- நடமாடும் விற்பனை ஊர்திகள் வாங்கப்பட்டு, நுகர்வோரின் வீடுகளுக்குக்கே சென்று துணிகள் விற்பனை
போன்ற வசதிகள் அரசால் செய்து கொடுக்கப்பட்டது.
இத்திட்டங்களுக்காக அகில இந்திய கைத்தறிக் கழகத்தால் வரிநிதியத்தின் மூலம் ரூ.517 இலட்சம் வழங்கப்பட்டது.
உற்பத்தி இலக்கும், உற்பத்தியும்:
ஆண்டு |
உற்பத்தி இலக்கு |
கூட்டுறவுத் துறை உற்பத்தி
(மில்லியன் கஜம்) |
கூட்டுறவு அல்லாத உற்பத்தி (மில்லியன் கஜம்) |
1956-57 |
354 |
121 |
233 |
1957-58 |
430 |
162 |
268 |
1958-59 |
462 |
211 |
251 |
இத்திட்டங்களால் எதிர்பார்த்தற்கும் மேலாகப் பலன் கிடைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் கைத்தறித் துணிகளின் விற்பனை 20 இலட்சத்திலிருந்து 60 இலட்சம் வரை உயர்ந்தது.
கைத்தறிகளின் எண்ணிக்கை 2/3 பங்கு அதிகரித்தது. கைத்தறித் துணி உபயோகம் ஆரம்பத்தில் குறைந்த வருமானப் பிரிவினரிடம் மட்டுமே பிரபலமடைந்தது. நாளடைவில் நகரத்தில் உள்ளவர்களும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
உபயோகத்தை அதிகப்படுத்தல்:
கைத்தறி நுகர்வை அதிகப்படுத்த அதன் தரத்தை உயர்த்தியதுடன், “சென்னை மாநிலக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்” சென்னை மாநிலத்தில் 300க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களையும், விற்பனை மையங்களையும் ஆரம்பித்தது. வெளிநாடுகளிலும் 5 விற்பனை மையங்கள் துவங்கப்பட்டன.
”சென்னை மாநிலக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்” 6 வாகனங்களை வாங்கி, அதனை நடமாடும் விற்பனை நிலையங்களாகச் செயல்பட வைத்து, நகரத் தெருக்களில் விற்பனை செய்ய வைத்தது. இவை தவிர, விற்பனையை அதிகப்படுத்த எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை, மானியமாகும். இம்மானியத்தின் மூலம் கைத்தறி விற்பனையில் 1 ரூபாய்க்கு 1 அணா 6 பைசா தள்ளுபடி செய்யப்பட்டது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், கைத்தறி வாரம் கொண்டாடப்பட்டு சமயங்களில் 1 ரூபாய்க்கு 2 அணா தள்ளுபடி வழங்கப்பட்டது.
கைத்தறி வாரம்:
கைத்தறித் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், பொது மக்களின் கவனத்தைக் கவரவும் நாடெங்கும், ஆண்டுதோறும் ”அகில இந்திய கைத்தறி வாரம்” கொண்டாடப்பட்டது.
கைத்தறி, பட்டுத் தொழில்:
கூட்டுறவு வரி நிதியத்திலிருந்து 15 கைத்தறி பட்டு நெசவாளர் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவற்றில் 1100 உறுப்பினர்கள் ரூ 1,00,050 பங்கு மூலதனம் செலுத்துச் சேர்த்தனர். மேலும் 3 கூட்டுறவு நூற்பாலைகள் பதிவு செய்யப்பட்டன.
- பேட்டை
- ஸ்ரீவில்லிபுத்தூர்
- திருச்செந்தூர்
- சேலம்
- அருப்புக்கோட்டை
- நெல்லை
ஆகிய மாவட்டத்தில் கூட்டுறவு நூல்பாலைகள் அமைக்க திட்டம் பரீசீலிக்கப்பட்டது.
2ம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் ரூ 728 இலட்ச ரூபாயில் கீழ்க்கண்ட திட்டங்களைச் செயல்படுத்த திட்டங்கள் போடப்பட்டது.
திட்டங்கள்:
- 50% கைத்தறி நெசவாளர்களை கூட்டுறவு சங்கத்தின் கீழ் கொண்டு வருவது.
- 1600 வீடுகள் கொண்ட 16 நெசவாளர்கள் காலனியை 74,29 இலட்சம் ரூபாயில் அமைப்பது.
- நெசவாளர் காலனி வீடுகள் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு மட்டும் அளிப்பது.
- மாநில விற்பனை நிலையத்தின் மூலம் 100 கைத்தறி விற்பனை நிலையங்கள் அமைப்பது.
- கைத்தறித் துணிகள் விற்பனை செய்யும் கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தள்ளுபடி அளிப்பதற்காக ரூ 73 இலட்சம் (மானியம்) அளிப்பது.
- கைத்தறித் தொழிலாளர்களுக்காக 6 கூட்டுறவுத் தொழிற்சாலைகள் அமைப்பது.
- தரமான துணிகள் உற்பத்தி செய்யத் தேவையான சாதனங்களைக் (ரூ 10.85 இலட்சம் மதிப்பு கொண்டவை) கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்குவது.
- 1600 நெசவாளர்களுக்கு நவீன ரகத்துணிகள் நெசவில் பயிற்சி அளிப்பது.
2-ம் ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கிய பின்பு இத்திட்டங்கள் செம்மையாகவும், திறமையாகவும் செயல்படுத்தப்பட்டதால் கைத்தறித் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. 1.4.1959ல் 49,000 நெசவாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினராகினர்.
பால்பண்ணை:
விவசாயத்தோடு நெருக்கமான தொடர்புடைய மற்றொரு தொழில், பால்பண்ணைத் தொழிலாகும். ஒரு விவசாயிக்கு நிலத்திற்கு அடுத்த படியாக அவனது பெரும் சொத்து கால்நடைகளே ஆகும். கால்நடைகள் விவசாயத்திற்கு தேவையான உரத்தை வழங்கியது. இதனால் மண் வளம் பெறுகிறது. கால்நடைகள் நிலத்தை உழுவதற்குப் பயன்பட்டன.
கால்நடைகள் வழங்கும் பால், விவசாயிகளின் குடும்பத்திற்குப் பயனுள்ளதாகிறது. எஞ்சியுள்ள பால் அங்காடிக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
பால் வழங்கும் கூட்டுறவு ஒன்றியம்:
சென்னை நகரினைச் சுற்றியுள்ள பால் வழங்கும் சங்கங்கள் ஒண்றிணைக்கப்பட்டு சென்னையில் ”பால் வழங்கும் கூட்டுறவு ஒன்றியம்” என்ற அமைப்பு 1927ல் ஏற்படுத்தப்பட்டது.
1959ல் இவ்வொன்றியத்தில் 131 சங்கங்கள் இணைக்கப்பட்டது. இவற்றின் ஒரு நாளைய உற்பத்தி 9000 படியாகும். இதே போல் மாநிலத்தின் மற்ற பாகங்களிலும் பால் வழங்கும் கூட்டுறவு ஒன்றியங்கள் ஆரம்பிக்கப்பட்டு 1959ல் 569 பால் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களும் 19 கூட்டுறவு ஒன்றியங்களும் இருந்தன. 1960ல் 761 சங்கங்களாகவும் 20 ஒன்றியங்களாகவும் உயர்ந்து, நாள் ஒன்றுக்கு 29,250 படி வாங்கி நுகர்வோருக்கு அளித்தது.
கடன் வழங்கல்:
2ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் ஆண்டில் ரூ 7 இலட்சம் கடனும், 2ம் ஆண்டில் ரூ 8 இலட்சம் கடனும், 3ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ 10 இலட்சம் கடனும் வழங்கப்பட்டது. 1959ல் இவ்வகைக் கடன்கள் மாவட்டக் கூட்டுறவு மைய வங்கி மூலமும் வழங்கப்பட்டது.
மாநிலக் கடன் தவிர, மாவட்டக் கூட்டுறவு மைய வங்கிகள் மூலமும் கடன் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி நிதி வசதி செய்தது. ரிசர்வ் வங்கியிடமிருந்து சென்னை மாவட்ட கூட்டுறவு மைய வங்கி இந்த வசதியைப் பயன்படுத்தி 4 இலட்சம் ரூபாய் பெற்று “சென்னை கூட்டுறவு” மூலம் பால் மாடுகள் வாங்கப்பட்டன.
மாட்டுத் தீவனம்:
3வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 10 பசுந்தீவனப் பண்ணை அமைக்கவும், 12 கலப்புத் தீவனப் பண்ணைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. காமராஜ் ஆட்சியில் பால்பண்ணைத் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. பால்பண்ணைத் தொழில் குடிசைத் தொழிலாகவும் மாறியது. பல விவசாயிகளுக்கு இதன் மூலம் உப வருமானமும் கிடைத்தது.
சர்க்கரை ஆலை: (1960-61)
சென்னை மாநிலத்தில் சர்க்ககரை ஆலைகளைக் கூட்டுறவு அடிப்படையில் அமைப்பது என்ற புதிய முயற்சியை அரசு எடுத்தது.
மாநிலத்தில் விளையும் கரும்பில் ஒரு பங்கு மட்டுமே த்வியார் சர்க்கரை ஆலைகளால் வழங்கப்பட்டது. எஞ்சியவையெல்லாம் நாட்டுச் சர்க்கரை தயாரிக்கவே பயன்பட்டன. வெல்லம், சர்க்கரையின் விலையில் தேவைக்கு பொருட்டு ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்டன. இது விவசாயிகளையும், சர்க்கரை உற்பத்தியாளர்களையும் கடுமையாகப் பாதித்தது. மேலும் சிறிதளவு கரும்பு உற்பத்தி செய்யும் விவிசாயிகளால் அதைத் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உதவவும், அவர்களைப் பாதுகாக்கவும், நல்ல விலை கிடைக்கவும் 1955ல் “அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள்” அமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டது.
இந்திய அரசு, நாட்டில் சர்க்கரைக்கு நிலவும் தட்டுப்பாட்டைப் போக்க அதிக அளவில் சர்க்கரை ஆலைகளை அமைக்க ஊக்கம் அளித்தது. புதிய தொழிற்சாலைக்கு அனுமதி வழங்குதல், கூட்டுறவுத் தொழிற்சாலைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இக்கொள்கையின் காரணமாக சென்னை மாநகரத்தில் 3 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் புதிதாக அமைக்கப்பட்டன.
சர்க்கரை ஆலைகள் |
உற்பத்தி |
1 நாளுக்கு |
ஆண்டுக்கு |
கோயம்புத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, அமராவதி கூட்டுறவு ஆலை |
900டன் உற்பத்தி |
11897டன் |
வடஆற்காடு-ஆம்பூரில் கூட்டுறவு ஆலை |
800டன் உற்பத்தி |
13293டன் |
செங்கல்பட்டு- மதுராந்தகம் கூட்டுறவு ஆலை |
800டன் உற்பத்தி |
6424டன் |
இதற்கான மொத்த செலவு 110 இலட்சம் ரூபாய் ஆகும். இதில் 60% நீண்ட கால கடனாக இந்திய தொழிற்சாலை நிதிக்கழகத்தால் வழங்கப்பட்டது. மீதியுள்ள 40% கூட்டுறவு சங்க உறுப்பினர்களாலும், மாநில அரசாலும் வழங்கப்பட்டது.
கூடுதல் சர்க்கரை ஆலை:
மேலும் மூன்று சர்க்கரை ஆலைகள் கூட்டுறவு சங்கம் அடிப்படையில் அமைக்கப்பட்டது (சேலம் சுகர்ஸ், கள்ளக்குறிச்சி சுகர்ஸ், நேஷனல் கோ சுகர்ஸ், சமயநல்லூர்). இவை ஒவ்வொன்றிலும் 1 நாளைக்கு 1000டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. மூலதனச் செலவிற்காக இந்தியத் தொழிற்சாலை நிதிக்கழகம் நீண்டகால கடனாக ரூ 90 இலட்சமும், மாநில அரசு ரூ 25 இலட்சமும் மீதமுள்ள ரூ 25 இலட்சம் தொழிற்சாலையின் பங்கு மூலதனம் எனப் பங்கு பிரிக்கப்பட்டது.
முக்கிய காரணிகள்:
ஒரு சர்க்கரை ஆலை வெற்றிகரமாக இயங்குவதற்குப் பல காரணங்கள் உள்ளன.
- தொழிற்சாலை அமைந்துள்ள இடம் அதிக அளவு கரும்பு விளையக் கூடிய இடமாக இருக்க வேண்டும்.
- தொழிற்சாலைகளுக்கும், குடியிருப்புகளுக்கும் தேவையான நீர் தங்கு தடையின்றிக் கிடைக்க வேண்டும்.
- கரும்பு விளையும் இடத்தில் இருந்து கரும்புத் தொழிற்சாலைக்குக் கொண்டு வர நல்ல சாலை வசதி இருக்க வேண்டும்.
- சர்க்கரையை அங்காடிக்கு எடுத்துச் செல்ல, அருகில் இரும்புப்பாதை மற்றும் சாலை வசதிகள் இருக்க வேண்டும்.
- மின்சாரம் போதுமான அளவு கிடைக்க வேண்டும்.
- தொழிற்சாலைச் சுற்றிலும் 3000 முதல் 4000 ஏக்கரில் கரும்பு விளைய வேண்டும்.(அப்போது தான் தொழிற்சாலைக்கு தொடர்ச்சியாக கரும்புகள் கிடைக்கும். அப்படி கிடைத்தால் மட்டுமே ஆண்டிற்கு 150 நாட்கள் தொழிற்சாலை இயங்க முடியும்.)
- கரும்பு வெட்டப்பட்ட சிறிது நேரத்தில் நசுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் 0.1% முதல் 0.25% சாறு குறையும். இதனால் சர்க்கரை அளவும், இலாப அளவும் குறையும்.